Sunday, December 17, 2017

இரயில் தண்டவாளங்கள் போல....ராதைகேசவன் வாழ்வு...இறுதி பாகம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 நீண்ட பதிவு.
தீக்குறளை சென்றோதோம்.
இந்த வார்த்தை கேசவனுக்குத் தான் பொருத்தம்.
அவனுக்குத் தான் பெற்ற குழந்தைகளை ஒழுங்காகக் கரை சேர்க்கணும். கடமை தவற   கூடாது.
ராதையின்  வீட்டில்   இன்னொரு   பூகம்பமே ஆயிற்று.
வெகு நாட்கள்  கழித்து  
சுய நினைவுக்கு  வந்தனர். அடுத்தடுத்து  வீட்டில் நடந்த 
சம்பவங்கள் அவர்களை இப்பொழுதுதான் விழிப்பு நிலைக்குத் தள்ளின.
இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்த தங்கள் மக்களிடம் வெறுப்பு தோன்ற ராதை 
மகளிர் விடுதியில் தோழியுடன் போய் இருந்து 
கொண்டால். முக்கிய காரணம் நவீன் சென்னையை விட்டுக் கிளம்பியதுதான் .
ராதைக்கு அது பெரிய நஷ்டம். அவள் எதிர்பார்க்கவில்லை.
தன்னை விட்டு அவன் பிரிவான என்று அவளுக்குத் தோன்றியதே இல்லை.
ராதையின் பெற்றோர்கள் சொன்ன இழி வார்த்தைகள் அவனைத் துரத்திவிட்டன .
இந்த நிலையில் கேசவன் அவளை சந்தித்தான்.
இருவர் மனமும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்பதை இருவரும் உணர்ந்தனர்.
ராதையின் மனதில் வேறு யாருக்கும் இடம் இல்லை.
ஆன்மிகத்தில்   பற்று வைத்த கேசவனுக்கு 
ராதையிடம் நாட்டம் இல்லை. 
தன்  அம்மா தன்னோடு தான் இருப்பாள் என்று சொன்ன அவனுடைய  உறுதி  வேறு அவளை மனம் சுளிக்க வைத்தது.
ஒரு வார யோசனைக்குப் பிறகு 
அவனுடன் குடும்பம்  நடத்த ஒத்துக்க கொண்டாள் 
தாம்பத்தியம் என்ற வார்த்தைக்கு 
அங்கே இடமில்லை. அவளிடம் பணம் இல்லை. இருக்க ஒரு இடம் தேவை. அது எங்கிருந்தாலும் பரவாயில்லை.
சுதந்திரம் கொடுத்தால் போதும்.
இதைக் கேட்ட கோதை  ,என் இந்தத் தலைவலியை இழுத்து வீட்டுக் கொள்கிறாய்.    அவள் மீண்டும் அதே வழிக்குப் 
போகமாட்டாள்  என்று என்ன நிச்சயம் . வக்கீலிடம் சென்று பிரிவு வாங்கிக்கொள். குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள் என்று சொல்லிப் பார்த்தாள் .
எதற்கும் கேசவன் சம்மதிக்கவில்லை.
குழந்தைகள் இன்னும் அவளை வெறுக்கவில்லை.
அம்மா என்று பிம்பமாக அவள் இருந்தால் போதும்.
எனக்கு  தில்லிக்கு மாற்றல் கேட்டிருக்கிறேன்.
நீயும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று 
வேண்டிக்கொண்டான்.
நீ அவளை மன்னித்து ஏற்றுக் கொள்கிறாயா என்று தாய் கேட்டதற்கு, நான் அவ்வளவு பெரிய மகான் இல்லைம்மா.
எனக்குத் தீராத வருத்தம் தான்.
ஆனால் அது என்னைப்  பாதிக்க நான் விடப்  போவதில்லை. தில்லி பல்கலைக் கழகத்தில் பிலாசபி  மேஜர் செய்யப் போகிறேன்.
அடுத்தாற்போல் என்னை குடுமி சகிதம் உபன்யாசம் செய்யும் பௌராணிகராக     நீ  பார்க்கலாம் என்று லேசாகச் சிரித்தான்.
கோதைக்குச் சிரிப்பு வரவில்லை.
இவனுக்கே இவ்வளவு பக்குவம் என்றால் எனக்கு இதற்கு மேலும்   வைராக்கியம் வேண்டும்.
அப்படியே ஆகட்டும்  என்ற படி  57 வயதில் மற்றோரு  புது குடித்தனம் செய்ய மகன்,மருமகள்,பேரன் பேத்திகளோடு கிளம்பினாள்.
வாசிப்பவர்கள், இந்த சம்பவங்களில் என் எழுத்தில்  ஏதாவது 
அசம்பாவிதமாகத் தோன்றினால் மன்னிக்கணும்.
நடந்ததை ஒப்பிக்கும் மாணவியாகத்தான் 
இருந்திருக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மார்கழிப் பாசுரம் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வையத்து  வாழுவீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலில்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்  நாட்காலே நீராடி ,
மையிட்டு எழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன  செய்யோம் தீக்குறளை சென்றோதோம்.
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி
உகந்தேலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அம்மா  உன் ஆசைப்படியே நாங்கள் நடந்து கொள்ள உன் கருணையே வழிகாட்டி.🙏🙏🙏

Saturday, December 16, 2017

மறுகதை மீண்டும் தொடரலாம்.9 .

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அந்த வாரம் குழந்தைகள் ராதையைப் பார்க்க வரவில்லை.
கேசவன் தன் அப்பாவின் பெரிய தமையனாரைப் போய்ப் பார்த்து

தன் கவலைகளையும், அதற்கான தீர்வுகளையும் 
விவாதித்தான்.

அவர் பலவித நிகழ்வுகளையும் பார்த்தவர். குடும்பம்
என்னும் கூடு இனியாவது  சேரட்டும் என்று,
பலவித கோணங்களில்
ஆராய்ந்து அவனைப் பதம் செய்யப் பார்த்தார்.

அவனுக்கு உடலே கசந்தது. இந்தக் கொடுமைக்கு
தான் எப்படி ஆளானோம். எந்தக் கர்மாவுக்கு இது பலனாகக்
கிடைத்திருக்கிறது என்று யோசித்தான்.
பெரியப்பா வைத்த தீர்வுகள் 1, ராதையைச் சந்தித்து
குடும்பத்தோடு சேர்ந்து இருக்கக் கேட்பது.
2, இருக்கும் இடத்தை மாற்றி வேறு இடம் போவது,
3,மனம் தெளிவாக   பரிஹாரமாகப் பல
கோவில்கள் தரிசனம்.
4,கேசவனே தன் மனதைப் பண்படுத்திக் கொள்ள 
வேண்டியது மிக அவசியம்.
இதெல்லாம் கேட்கவே  கேசவனுக்குப்
பாகல்காயாகக் கசந்தது.
அவன் மனம் இறைவன் வசம் திரும்பி
வருடங்கள் ஆகிவிட்டன.
பெரியப்பா மீண்டும் கேசவனைக் கேட்டார்.
நீ மறுமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்வாயா.
அதுவும் ஒரு வழி என்றதும் கேசவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. 
என்ன பெரியப்பா எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை.
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அது ஒன்றே என் தீர்வு. நீங்கள் சொல்படி செய்கிறேன்
என்று வீட்டுக்கு வந்து கோதையிடமும், ,கோவிந்தனிடமும்
குனிந்த தலை நிமிராமல் பெரியப்பாவின்
அறிவுரைகளைக் கொண்டு சேர்த்தான்.
கோதைக்கு இனி கண்ணீர் வடிக்க  தெம்பில்லை.
எப்படி எப்படியோ  கோடித்து வளர்த்த குழந்தையின்
எதிர்காலம்  இப்படி ஆனது வெகுவாக நோக வைத்தது.
இனி வெகு காலம் தான் இருக்க மாட்டோம் என்று தோன்றிக்
கொண்டே இருந்தது.
தங்கள் குல ஆச்சார்யரிடம் சரண் அடைந்து குல வழக்கப்படி 
பரண்யாசம் எல்லாம் செய்து கொண்டார்.
கோவிந்தனின் குழந்தைகளை
வளர்ப்பதிலும் இறைவனிடம் பக்தி செய்வதிலும்
காலம் கழிக்க ஆரம்பித்தார்.
மாலாவிடம் கேட்டு அவளது ஆசையான பாட்டுத் துறையில்
சேர்த்துவிட்டார்.
கேசவனும் ராதையும் பேச்சுகள் நடத்துவதே கடினமாக
இருந்தது.    முடிவை நோக்கி  தொடரும் 

மனம் இனிக்கும் மார்கழி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மார்கழியை நினைக்கையில் மனம் முழுவதும்
உருகும். நாங்கள் இருந்த இடங்களில் எல்லாம் திருப்பாவை பாட்டே துயில் எழுப்பும்.
எங்கும் கோவில்கள் இருக்கும்.
எம் எல் வி அம்மாவின் மார்கழித்திங்கள் 
குரல் அனைவரையும் 4 மணிக்கே எழுப்பும்.
பாட்டை கேட்டபடி  பரீட்சைக்குப் படிப்பதோ, வாசல் தெளித்துக் கோலம் 
போடுவதோ நிகழும்.
பிறகு கோவிலும் சுடச்சுட பொங்கலும்.
சிறிய வயதில் திருப்பாவை பக்திக் குழுவுடன் 
அதிகாலைக் குளிரில் பாடல்களும்  உண்டு. அவர்களுடன் பாடல்கள் 
பாடியபடிக் கோவிலை அடைந்த நேரங்கள் இனிமையானவை.
எல்லாம் அந்தக் கோதை நாச்சியாரின் மகிமை,கருணை.
அரங்கனும் ஆண்டாளும் என்றும் நம்மைப் பாதுகாக்கட்டும்.

மாறும் காலம் 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

     வண்டியை விட்டு இறங்கிய ராதை வீட்டுக்குள் பாடியபடி விரைந்தாள். பின்னாலயே வந்த
நவீன், கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்களைக் கண்டு அதிர்ந்து போனான்.

அடுத்த அரை மணி நேரம் வீடு அமளிதுமளிப் பட்டது.
ராதை மட்டும் அமைதியாக இருந்தாள்.

அவளின் அம்மா ,அப்பா  அதிர்ச்சியுடன் அவர்கள் பேசுவதைப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள், நவீன் ஏதோ அவர்கள் மொழியில் கெஞ்சுவது
தெரிந்தது.
ராதையைக் கேட்டால் மௌனம் சாதித்தாள்.
அவளுக்கும் இந்த விஷயம் தெரியும் என்று உணர்ந்தனர்.

பெண்ணைப் பெற்றவர், அவரிடம் வந்து நாங்கள்
இதை எதிர் பார்க்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்
 கல்யாணம் ஆயிற்று.
  என் மகள் கர்ப்பம் தரித்து ,,இரண்டு மாதங்களில்
இங்கே வேலை கிடைத்து வந்தான்.

இது போல அனியாயம் நாங்கள் கண்டதில்லை.
 வருடம் ஒரு முறை வந்தானே.
ஒன்றும் எங்களுக்குத் தோன்றவில்லையே.
 உங்கள் பெண்ணும் மணமானவள் ஆமே. இந்த
உறவை எப்படி அனுமதித்தீர்கள்.
நாங்கள் தென்னாட்டுக்காரர்கள் பண்பாடு மிக்கவர்களாகத்தான் எங்கள்
ஊரில் பார்த்திருக்கிறோம்.
 இந்த அவமானம் எங்களால் தாங்க முடியாது.
இந்த மாப்பிள்ளையும் எங்களுக்கு வேண்டாம்
என்று வெளியே நடந்தார்.
அவரது மனைவி ராதையைப் பார்த்து அவர்கள் மொழியில்
அழுதுகொண்டே  ,கதறினாள்.
பின் கணவனைப் பின் பற்றினாள்.
நவீன் ,ராதையைப் பார்க்க அவள் தன் அறைக்குள்
புகுந்தாள் .அவனும் பின் தொடர
அதற்குப் பின் நடந்த ரசாபாசம் ,அவர்கள் வீட்டு சமையல் வேலை செய்யும் அம்மா
 மூலம்
பாட்டிக்கு வந்தது.  தொடரும்.

Friday, December 15, 2017

ராதையின் நாட்கள்.....7 ஆம் பாகம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


அப்பா, huggingனால்  என்ன அர்த்தம், சின்னப் பையன்  மாதவ்
கேட்டதும்  அவனை அணைத்துக் கொண்டான் கேசவன்.
இதுதான் கண்ணா. நீ பாட்டியை ஓடிப்போய்க் கட்டிக்கிறியே அதுதான்.
ஏன் பாடம் எதிலாவது வந்திருக்கா என்றான்.
இல்லை என்று திணறும் குழந்தையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது
அப்பாவின் மனம்.
 சரி .சொல்ல வேண்டாம். ஹக்கிங்க் இஸ் குட்
பையா. கண் களில் சந்தேகத்தோடு பார்க்கும் 7 வயசுக் குழந்தையைப் பார்த்து
வேறு ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அணைத்துக் கொண்டான்.
மனதில் கண்ணீர் நிரம்பியது.
 சென்னை வந்த ஆறு மாதங்களில் குழந்தைகளை இங்கும்
ராதையுடனும் இருந்தன. பள்ளிக்கூடத்துக்கு இங்கிருந்தே சென்றன.

 வந்த ஒரு வாரத்தில் ராதையின் கட்டுப்பாடுகளை ஒத்துக் கொண்டே குழந்தைகளை அழைத்து வந்தான்.
பெரியவர்கள் அவனுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை.
அவன்  மனமும் இறுகிக்கொண்டது.குழந்தைகளுக்கு
மட்டும் திறந்து கொண்டது. இதோ 3 வருடங்களும் ஓடி விட்டன.

ராதையின் வீட்டில் எல்லாமே வழக்கப்படியே நடந்தது.
நவீன் கிருஷ்ணா அவளுடைய உயிராக நடந்து கொண்டான்.
ஒரே ரசனை, புத்தக வாசிப்பு, பாடல்,நடனம் எல்லா
விருப்பங்களும் ஒத்துப் போயின. அந்த ஒரு நாள் வரும் வரை.

வாசலில் நின்ற வயதானவர்களைப் பார்த்து ராதையின் தந்தை
ஆங்கிலத்தில் யாரென்று கேட்டார்.
நவீன் கிருஷ்ணா இங்கே இருக்கிறானா என்று கேட்டார் அந்த பெங்காலி மனிதர்.
  இருக்கிறார். நீங்கள் யார் என்றதும், தன் மனைவியைப் பார்த்துவிட்டு அங்கேயே நின்ற
அந்த மனிதர் நாங்கள் அவனுடைய மாமனாரும் மாமியாரும்,
என்றதும் ஒரு தடவை உடல் நடுங்கியது ஸ்ரீனிவாசனுக்கு.
அதாவது ராதையின் அப்பாவுக்கு.
ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு அவன் கல்யாணமானவனா என்றார்.
ஆமாம் 5 வருடங்கள் ஆகிறது ஒரு பையன் கூட இருக்கிறான்.
அவன் ஒரு வருடமாக கல்கத்தாவுக்கு வரவில்லை.
கடிதங்களுக்குப் பதில் இல்லை. கவலையாகிவிட்டது.
அதுதான் நேரே வந்தோம்.
 அவன் வேலை செய்யும் கம்பெனியில் விசாரித்தபோது
அவன் இந்த விலாசத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.
அவனை அழைக்க முடியுமா.
அவன் குழந்தையும் மனைவியும் டாக்சியில் இருக்கிறார்கள்.
என்று சொன்னவரைப் பார்த்து வெறிக்க மட்டுமே
முடிந்தது.
அதே சமயம் வெளி கேட்டைத் திறந்து உள்ளுக்குள் நுழைந்தது
ராதை ஓட்டிய ஹெரால்ட் வண்டி. பக்கத்திலிருந்து உத்சாகமாக இறங்கினான்
நவீன்.   தொடரும்.
Add caption

Thursday, December 14, 2017

கேசவன் என்னாவது...6ஆம் பாகம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் ஆறாம் மாத திதிகள் வந்தன. ராதை வருவாள் என எதிர்பார்த்த
கோதை ஏமாந்தார்.

 தொலைபேசியில் விசாரித்த போது உடல் நலம் சரியில்லை என்று ராதையின் அம்மா
சொல்லிவிட்டார்.
கேசவனைப் பார்த்துக் கலங்கத்தான் முடிந்தது கோதையால்.
நான் உன்னுடன் வரட்டுமாடா என்று கேட்டதற்கும் சரியான சொல்லவில்லை.
இயல்பை விடக் கறுத்து இளைத்துக் காணும் மக்னைக் கண்டு கண்ணீர் வந்தது.
 நான் அங்கே
போய்க் கேட்பேன்.
ஒரு வருடத்துக்குள் போவது நல்லதில்லை என்று இருக்கிறேன்.

 என்றவளைப் பார்த்து ,அலுப்புடன் சொன்னான். அம்மா,நான் அவளுடன் நேரம் செலவழிப்பதில்லையாம்,.
பாம்பே வரும் எண்ணம் இல்லையாம்.
முடிந்தால் இந்த ஊருக்கு மாற்றி வரச் சொல்கிறாள்.

என்னால் முடியாத காரியம் அது.
இந்த ஊர்க் கொண்டாட்டம் அவளுக்குப் பிடித்திருக்கிறது.
என்னுடன் முடியுமானால் நீ வா. அங்கேயே
அப்பாவின்  மற்றத்திதிகளையும் கொடுக்கலாம் என்றான்.

விசேஷங்களுக்கு வந்திருந்த அம்மாவின் தங்கை
தனியாகப் பேசுவதைக் கவனித்தான்.
இனம் புரியாத சினம் வந்தது.
என்ன சித்தி,புதிதா ஏதாவது வம்பா என்ற கேட்ட கேசவனை அதிர்ச்சியுடன்
பார்த்தாள் சித்தி.
யாரைப் பத்தியும் இல்லடா கேசவா. உன் பெண்டாட்டி ராதையின்
பட்டணப் பிரவேசத்தைச் சொல்கிறேன்.
எப்போது பார்த்தாலும் ஒரு கல்கத்தாப் பையன் அவள் வீட்டில்
இருக்கிறான். வேலை முடிந்து இரவு வருகிறான்.
காலயில் செல்கிறான்.
அவள் அம்மா அப்பா கண்டு கொள்வதாகக் காணோம்.
நீயாவது கேட்கக் கூடாதோடின்னு
இவளைக் கேட்க வந்தேன்.
ஊரே  பேச ஆரம்பித்தாச்சு.
முற்ற விடாதே .குழந்தைகளையாவது உன்னோடு அழைத்துப் போ என்றாள்.
இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டான் கேசவன்.
 நான் அங்கே போய்ப்  பார்த்ததைத் தான் சொல்கிறேன்.
ஒரே அறையில் அடைந்து கிடக்கிறார்கள்.
 சனி ஞாயிறு, காரில் ஊர்வலம்.

ராதை அம்மாவிடம் கேட்டால் என்னவோ நடனத்துக்காக வந்தவன். நல்ல சினேதன்.
அவ கணவன் சரியாக இருந்தால் இவள்  மாறி இருக்க மாட்டாள்
என்று பெண்ணை சப்போர்ட் பண்றா.
இது என்ன குடும்பம் என்று எரிச்சல் வந்து நேரே இங்கே வந்தேன் என்றாள்.
மயான அமைதி வீட்டில் நிரம்பியது.. அடுத்த இரு மாதங்களில் கேசவன் சென்னையோடு வந்து சேர்ந்தான்.

அடுத்து இரு பகுதிகளில் முடித்துவிடுகிறேன் நண்பர்களே.

Tuesday, December 12, 2017

ராதையின் நெஞ்சம் கேசவனிடமா 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

  கோதையின் மனம் சமாதானம் அடைய மறுத்தது.
இரண்டு நாட்களில் 14 வயது முதல் தன்னுடன்
வாழ்க்கை நடத்திய கணவர் ஏன் இப்படிச் சட்டென்று
 உலகைவிட்டுக் கிளம்பினார்.
அவரைவிட்டு இன்னும் எத்தனை வருடங்கள் நான் இங்கே இருப்பேன்.

என்னென்னவோ எண்ணங்கள் அவர் உள்ளத்தில்
அலைமோதின. அவரது பிறந்தக மனிதர்கள் எல்லோரும் நன்றாகவே
இருக்கிறார்கள்.
எல்லோரும் எழுபது எண்பது தொண்ணூறு என்று
ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.
கோதையின் அம்மா 70 வயதில் ,மகளின் வீட்டு
வேலைகளைப் பார்த்துக் கொண்டு துணைக்கு இருக்க வந்திருக்கிறார்.

இருக்கும் கவலை போதாது போல இந்த ராதை வேறு
இங்கு வந்து இருக்க மறுக்கிறாள்.
அவர்களுக்குள் என்ன மனஸ்தாபமோ தெரியவில்லை.
அவனுடனும் போகவில்லை.
குழந்தைகளையும் பார்க்க முடியவில்லை. என்ன விவகாரமோ தெரியவில்லையே
  என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தாள்.
கோவிந்தனைக் கூப்பிட்டு விசாரித்தால்
கேசவன் ரொம்ப மூடியா இருக்காம்மா. பழைய படி இல்லை. நான் விசாரிக்கிறேன். நீ வருத்தப்படாதே என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தான்.
அடுத்து வருவது ஆறாம்  மாதம். ஒரு வார லீவில் கேசவன் வரவேண்டும்.
அப்போது இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டியது
அவசியம் என்று நினைத்தான் கோவிந்தன்.
அடுத்த நாள் ராதையைப் பார்க்க அவனும் மாலாவும் சென்றார்கள்.
வீடே கலகலப்பாக இருந்தது.
 நிறைய நட்புகளுடன் உட்கார்ந்திருந்த ராதா
இவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து அடுத்த கூடத்துள் அழைத்துச் சென்றாள்.
ஏதாவது அவசர விஷயமா,இருவருமாக வந்திருக்கிறீர்களே
என்று வினவியபடி
உட்கார்ந்தாள்.
குழந்தைகளைக் காணோமே  என்ற மாலாவிடம் இருவரும்
 தனி ஆசிரியரிடம் பாடங்கள் கற்றுக் கொள்வதாகச் சொன்னவளைத் தயக்கத்துடன்
பார்த்தான் கோவிந்தன். கேசவன் ஆறாம் மாத  திதிகள் கொடுக்க
வருவதாகவும்
அம்மா குழந்தைகளை அப்போது அழைத்து வரச் சொன்னதாகவும்
அவளிடம் தெரிவித்தான்.
குழந்தைகளுக்கு அந்தப் புகையும், சூழ்னிலையும்
 அவர்களைப் பயப்படுத்துகிறது. அவர்களுக்கு ஒன்றும் புரியவும் இல்லை.
இன்னோரு சமயம் பார்க்கலாமே .
 என்னுடைய நடனக் குழு காத்திருக்கிறது.
அம்மாவுக்கு என் நமஸ்காரங்களைச் சொல்லுங்கள்.
என்று எழுந்தவளைப் பார்த்துப் பிரமிக்கத்தான்
முடிந்தது மாலாவுக்கும் கோவிந்தனுக்கும்.
நீங்கள் பாம்பே போவது எப்போது  என்று கேட்டபோது,
இப்போதைக்கு இல்லை ,அவரிடம் சொல்லிவிட்டேனே என்றாள்.
அதற்கு மேல் நிற முடியாமல் இருவரும் வாசல் நோக்கி நடந்தனர்.
வழியில் வித விதமான வேடங்களில் ஆண்களும்
பெண்களும்  சிரித்து உரையாடிக் கொண்டிருக்க ,ஒரு இளைஞன்
மட்டும் ராதையின் கைகளைக்  கோர்த்துக் கொள்வதைப்
பார்த்து வியர்த்து விட்டது மாலாவுக்கு. என்ன இது என்று தொண்டை வரை வந்த
கேள்வியை விழுங்கியபடிக் கணவனைப் பார்த்தாள்....தொடரும்.

Sunday, December 10, 2017

கேசவன் ராதை 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இப்பொழுது நாம் கேசவன்,ராதையின்  வளர்ப்பு முறைகளைக் காணலாம்.
கோதையும் , வீட்டுக்காரரும் நிறைய பழையக் கலாசாரத்தில் மூழ்கியவர்கள்.
எந்த நிலையிலும் ஆசார அனுஷ்டானங்களை வீட்டுக் கொடுக்காதவர்கள்.

கேசவன், கோவிந்தன் இருவருமே   ....... பெற்றோர் சொல் தப்பாத பிள்ளைகளாகவே வளர்ந்தார்கள்.
அதிகம் பெண்களுடன் பழகியதில்லை.

மகன்களின்  நடத்தையில் பூரித்துப் போனவள் கோதைதான்.தன் பிசினஸில் குறியாக இருந்த
கோபாலன் ,இவர்கள் விஷயத்தில் தலையிட்டதில்லை.
முழுவதும் அம்மாவைப் பார்த்தே வளர்ந்த பிள்ளைகளிடம் நளினம்,மென்மையும், அதீத உணர்ச்சிகளுக்கு ஆளாகாத குணமும் இருந்தன.
அந்த சுபாவமே  அவர்களது கம்பீரத்துக்குக் காரண்மாக இருந்தது.

ராதையின் பெற்றோர் சிறிது காலம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்தவர்கள்.
கட்டுப்பாடும் ,சுதந்திரமும் சேர்த்துக் கொடுத்தே பெண்ணை வளர்த்தார்கள்.
அவளூம்  கல்லூரிக்காலத்தில் கூட சொல் மீறியவள் இல்லை.
பிடித்த பரதக் கலையில் நல்ல தேர்ச்சியும்,
அனேகரின் பாராட்டுகளில் மிக லயித்தவளாகவே இருந்து
விட்டாள். கேசவனையும் அவர்களது குடும்பமும்
பிடித்திருந்ததாலேயே திருமணத்துக்குச் சம்மதித்தாள்.

தனது கலையையும் அதன் கூடவே கிடைக்கும் கவனிப்பும் ,பாராட்டுகளும் அவளுக்கு
மிகத்தேவையாக இருந்தது.
 அதன் விளைவே  மும்பையில் அவள் எடுத்த முடிவு.
கேசவன் குணம் தான்,தன் குடும்பம்,வேலை,பெற்றோர்
இவர்களோடு அடங்கியது.

மனைவி மேடையில் ஆடுவது என்பது அவன் எதிர்பாராத நிகழ்வு.
குழந்தைகளைப் பிரிந்திருப்பதையும்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவனால் முடிந்த வரை ராதையிடம் பேசிப்பார்த்தான்.
அவள் தன் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை.

இதன் நடுவே  அவன் தந்தைக்கு வந்த மாரடைப்பு பேரிடியாகக் குடும்பத்தை நொறுக்கியது.

குடும்பத்தோடு சென்னை வந்த கேசவனால் ,அடுத்து வந்த
அவர் மறைவைத் தாங்கவே முடியவில்லை.
நிலை குலைந்த தாயைப் பார்க்கவே மனம் பதைத்தது.
கோவிந்தனுடன் சேர்ந்து அப்பாவின் பிரசுர நிலைய வேலைகளைச் சீர் செய்தான்.

குழந்தைகளை அவர்களுடைய அம்மம்மா வீட்டில் இருக்கச் சொல்லி இருந்தார்கள்.
ராதை அவன் கூட இருந்து அப்பாவுக்கான பிதுர்க் காரியங்களில் ஈடுபட்டாலும்
மனம் ஏனோ பொருந்தவில்லை.
கோவிந்தனுக்குப் புதிதாகப் பிறந்திருந்த ஆண் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு
வெறித்த நோக்கோடு உட்கார்ந்திருந்த
தாயைப் பார்க்கச் சகோதரர்கள் இருவர் கண்ணிலும் நீர்.
எப்படி ஆச்சு இந்த நிகழ்வு. இன்னும் அறுபதுக்கு அறுபது கூட
நடக்கவில்லையே, மாதா மாதம்
கேசவன் சென்னை வந்து அப்பாவின் மாதாந்திரக்
காரியங்களைச் செய்வதாக முடிவெடுத்து அவன் கிளம்பத் தயாரானான்.
தான் சென்னையில் இருந்து கொள்வதாகவும்
பிறகு மும்பை வருவதாகவும் சொன்ன ராதையைக் கட்டாயப்படுத்த அவனுக்கு மனதில்
வலு இல்லை..தொடரும்.

Saturday, December 09, 2017

ராதையும் கேசவனும் 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

குடும்பம்  இனிதாகச் சென்றது. மூன்று வருடங்களில் ஆண்  ஒன்று பெண் ஒன்றாக குழந்தைகள் பிறந்தன.

சென்னையில்  அம்மா அப்பாவுடன்  தங்கி பிரசவம் பார்த்துக் கொண்ட ராதா  திரும்பி வரும்போதுத் துணைக்கு ஒரு பெண்ணையும் அழைத்து வந்தாள் .

கேசவன் உடன் பிறப்பு கோவிந்தனுக்கும்
நல்ல குடும்பத்தில்  பெண் பார்த்து  கோதை அருமையாகத்
திருமணம்  செய்து வைத்தாள் .
 கோவிந்தன்  மனைவி  மாலா.
சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவள்.
 பாட்டு, நாட்டியம் ஒன்றும் தெரியாது.
முதலில் கோவிந்தனுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான்.

ஆனால் அவளுடைய அடக்கமும் ,அம்மாவிடம் அவள் காட்டிய மரியாதையும்
அவன் மனதை முழுவதும் மாற்றி விட்டது.

வாரக்கடைசி சுற்றலுக்கு  எல்லாம் ஈடு கொடுத்து
வீட்டு நிர்வாகத்திலும்  மாமியாருக்கு உதவியாக இருந்தாள் .
இருவரும் மும்பைக்கும் ஒரு வாரம் போய் இருந்து விட்டு வந்தார்கள் .

இரண்டு குழந்தைகளோடு ராதைக்கு நேரம் சரியாக இருந்தது.
துணையாக வந்த சரஸ்வதி  ,குழந்தைகளை பார்த்துக் கொள்ள நால்வரும் மும்பையில் எல்லா இடங்களையும்
 பார்த்து மகிழ்ந்தார்கள்.
மச்சினன் ஓரப்படி சுதந்திரமாக வலம் வருவது ராதைக்கு கொஞ்சம் மனத்தாங்கல் தான்.

சிறு சிறு  தாபங்கள்  அவளுள் வளர்ந்தன.
தன்  நாட்டியத்தைத் தொடர   முடியவில்லை.
கணவனுடன் ஊர் சுற்ற முடியவில்லை. அவனோ, அலுவலகம் வீடு,குழந்தைகள் என்று இருந்தான்.
வேலையின் பளு  குழந்தைகளோடு இருக்கையில் குறைவதாக  உணர்ந்தான்.
இவர்கள் வளரட்டும் மா. நாம் எல்லா இடங்களும் போகலாம்  என்று அவளுக்கு சமாதானம் சொல்லுவான்.

ஒரு வருட டிசம்பர் மாத  இசை விழாவுக்குப்  போய் வந்தவளுக்கு  தன தோழிகள் ஆடிய கச்சேரிகளைப  பார்த்து மனம்  மிக வருந்தியது. தன்  வாழ்க்கையே
 வீணாகப்  போவதாகத் தோன்றியது.

மாதுங்காவிலும் சபாக்கள் இருந்தன.
 கேசவனை வீட்டில் விட்டு விட்டு, சபாக்களுக்குப் போய் வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள் .

அங்கேயே தன நடனத்தைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு ஆசிரியரையும் அடையாளம் கண்டு, அந்த வகுப்புகளுக்குப்
போக ஆரம்பித்தாள். குழந்தைகள் சரஸ்வதியோடு  நெருங்கி சமாதானம் அடைந்தன.

இந்த இடைக்கால வசந்தம்  தடைப்பட்டது.
சரஸ்வதிக்குத் திருமணம் நிச்சயம் செய்வதாகக் கடிதம் வந்த போது .

ராதைக்கு  வந்த கோபம் சொல்லி முடியாது.
அடுத்து அவள் எடுத்த முடிவு  கேசவனுக்கு
அளவில்லாத வருத்தம் கொடுத்தது.
குழந்தைகளைத் தன்  அம்மா வீட்டில்   விடப்  போவதில்
 உறுதியாக இருந்தாள் .

சென்னையில் படிப்பைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.
வீட்டு வண்டியில்  போய் இறங்கித் திரும்பி வரலாம்.
நல்ல கான்வெண்டுகள்  இருக்கின்றன.
தன்னைப் போலவே  பெண்ணையும் அம்மா  வளர்த்து விடுவாள்.
பையனுக்கும்  டான் பாஸ்க்கோவில்  இடம் கிடைத்து விடும்.
என்று அவள் திட்டங்கள்  வளர்ந்தன.

கேசவனுக்குத் தன்  உலகமே  இருளுவது போல்  தோன்றியது .
 குழந்தைகள் இல்லாமல் என்ன குடும்பம் இருக்க முடியும் என்று  கலக்கம்  ஏற்பட்டது.   தொடரும்.